வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு


வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு

“சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை; வங்கிக் கணக்கு எண்ணை பயன்படுத்தி மானியத்தைப் பெறலாம்’ என மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை கூறியதாவது:

அரசு மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்தில் (டிபிடிஎல்) சேரும் அனைவருக்கும், சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். அதன்பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு மானியத் தொகை செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளருக்கு அவர்கள் வாங்கும் முதல் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகை, உருளை வாங்குவதற்கு முன்னரே வங்கிக் கணக்கில் முன்தொகையாக (அட்வான்ஸ்) செலுத்தப்படும். இது, வாடிக்கையாளர்கள் முதல் உருளை பெறும்போது மட்டுமே பொருந்தும்.

அரசு மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்தில் 2 வழிகளில் மக்கள் சேரலாம். ஒன்று, ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அந்த எண்ணை, எரியாவு முகவரிடமும், வங்கியிடமும் அளித்து மானியத்தைப் பெறலாம்.

இரண்டாவதாக, ஆதார் எண் இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்கை அளிப்பதன் மூலம், அரசு மானியத்தைப் பெறலாம். அதாவது, ஆதார் எண் இல்லாததை காரணமாக கொண்டு, அரசு மானியம் மக்களுக்கு வழங்கப்படாமல் நிராகரிப்படுவதை தவிர்ப்பதற்காக, சில திருத்தத்துடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல், நேரடி அரசு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து, அந்த திட்டத்தில் சேருவதற்கு 3 மாதகாலம் வரை மக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்தில், நேரடி அரசு மானியம் வழங்கும் திட்டத்தில் சேராதவர்களுக்கும், மானியத்துடனேயே சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும். அந்த 3 மாத காலத்திலும், அந்த திட்டத்தில் சேராமல் யாரும் இருக்கும் பட்சத்தில், மேலும் 3 மாத கால அவகாசம் கூடுதலாக வழங்கப்படும்.

அப்போது அக்காலகட்டத்தில் அவர்களுக்கு சந்தை விலையிலேயே உருளைகள் வழங்கப்படும். அதற்கான மானித் தொகை, அரசு திட்டத்தில் சேர்ந்தவுடன் அவர்களது பின்னர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஆனால் கூடுதலாக வழங்கப்பட்ட 3 மாத அவகாசத்திலும் யாரும் அந்த திட்டத்தில் யாரும் சேரவில்லையென்றால், அவர்களுக்கான அரசு மானியம் நிறுத்தப்படும். அதன்பிறகு, அந்த முகவர்களுக்கு சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும். ஆனால் கூடுதல் கால அவகாசம் முடிந்தபிறகு, ஒருவேளை அவர்கள், அரசு திட்டத்தில் சேர்ந்தால், அவர்கள் வாங்கும் சமையல் எரிவாயு உருளைக்கு அவர்களுக்கு முன்தொகை அல்லது மானியம் முறைப்படி வழங்கப்படும் என்றார் அவர்.

One thought on “வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு

Leave a Reply